ஜெருசலேம் அல்லது எருசலேம் அல்லது யெருசலேம் (Jerusalem) – இது எபிரேய மொழியில் யெருசலயிம் (ירושלים) என்றும், அரபி மொழியில் அல்-குட்ஸ் (القدس) என்றும் அழைக்கப்படுகிறது. எருசலேமைக் குறிக்கும் எபிரேயச் சொல்லுக்கு “அமைதியின் உறைவிடம்” என்றும், அரபிச் சொல்லுக்கு “புனித தூயகம்” என்றும் பொருள். பொதுவாக இதை ‘அமைதியின் நகரம்’ என அழைப்பர்.
ஆபிரகாமிடமிருந்து மரபுவழி வருகின்ற சமயங்களாகிய யூதம், கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மூன்று சமயங்களுக்கும் ஜெருசலேம் ஒரு புனித நகராக உள்ளது.
தாவீது மன்னர் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஐக்கிய இராச்சியத்தின் தலைநகராக சுமார் கி.மு. 1000 ஆண்டளவில் நிறுவினார். தாவீது மன்னரின் மகன் சாலமோன் அங்கு ஜெகோவாவிற்கு (இறைவன்) புனித ஆலயத்தை கட்டியெழுப்பினார். இதனால் அன்று தொடக்கம் இன்று வரை யூதர்களுக்கு மாபெரும் புனித நகராக விளங்குகிறது.
இயேசு கிறிஸ்து சுமார் கி.பி. 30இல் ஜெருசலேமில் சிலுவையில் அறையுண்டு இறந்து பின்பு உயிர்த்தார். இதனால் அந்நகர் கிறித்தவர்களுக்கு புனித நகரமாயிற்று.
மக்கா, மதீனா ஆகிய நகரங்களுக்கு அடுத்த நிலையில் இஸ்லாமியர் ஜெருசலேமை தங்கள் புனித நகராகக் கருதுகின்றனர். முகம்மது நபி ஜெருசலேமிலிருந்து விண்ணகப் பயணம் சென்று திரும்பினார் என்று இஸ்லாமியர் நம்புகின்றனர்.
எந்தளவிற்கு இது புனித நகராக கருதப்படுகிறதோ அந்தளவிற்கு இது வன்முறைகளுக்கும் பேர் பெற்றது. அந்நகரம் இருமுறை அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது; 23 தடவை முற்றுகையிடப்பட்டது; 52 தடவை தாக்குதலுக்கு உள்ளானது; 44 தடவை கைப்பற்றப்பட்டது.
பல தரப்பட்ட இன, மொழி, மத, பிரதேசத்திலுள்ளவர்களால் இது ஆளப்பட்டது. 53.69 வீதமானவர்களின் (கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள், பஃகாயினர்) இதய பூமியாக இது காணப்படுகிறது. ஆகவே சொந்தம் கொண்டாடுவதிலும் போட்டி காணப்படுகிறது.
யூத – அரபு அல்லது யூத – பலஸ்தீனிய பிரச்சனைகளின் மையப் புள்ளியாக இந்நகர் காணப்படுகிறது. இஸ்ரேல் தன் நாட்டின் தலைநகராக ஜெருசலேமை 1980இல் அறிவித்தது. ஆனால் பலஸ்தீன தனி நாட்டின் தலைநகராக்க வேண்டுமென்று பலஸ்தீன சுய ஆட்சி உலக நாடுகளைக் கேட்கிறது. இந்த விடயத்தில் உலக நாடுகள் இரு அணிகளாக பிரியும் தன்மை காணப்படுகிறது.




