ஜென் கதைகள்

ஜென் கதைகள் – நிதானம்

நிதானம் :

நிதானம்

தற்பாதுகாப்புக் கலையினைக் கற்றுக் கொள்ள விரும்பிய ஒரு மாணவன் குருவை அணுகி “இக் கலையினைக் கற்றுக் கொள்ள எவ்வளவு காலம் தேவை”? எனக் கேட்டான்.

குரு “பத்து வருடங்கள்” எனப் பதில் அளித்தார்.

குருவின் பதிலால் மாணவன் பொறுமை இழந்து திருப்தியற்றவனானான். மீண்டும் குருவிடம் “பத்து வருடங்களைவிட விரைவாகக் கற்க விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்வேன். தேவைப்பட்டால், பயிற்சிகளை 10 மடங்கு அதிகமாகவோ அல்லது அதிக மணித்தியாலங்களோ அதற்காக எடுத்துக் கொள்வேன். ஆகவே இதன்படி கற்றுக் கொள்ள எவ்வளவு காலம் தேவை”? என்றான்.

குரு பதிலாக “இருபது வருடங்கள்” என்றார்.


வேகத்தினால் கற்றுக் கொள்ள முடியாது. இலக்கு மீது உள்ள ஆர்வத்துடன் நிதானம், உறுதி என்பவற்றுடன் சேர்ந்து இருக்க வேண்டும். பதறாத காரியம் சிதறாது.
ஜென் கதைகள் · philosophy

ஜென் கதைகள் – குணம்

ஜென் மாணவன் ஒருவன், தன் குருவிடம் தன்னிடமுள்ள குறை ஒன்றை முறையிட்டு தீர்வு காண முயன்றான்.

‘நான் விரைவாக உணர்ச்சிவசப்படுகிறேன். அதிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை’

‘உன் பிரச்சனையின் தீவிரத்தை நான் இப்போது பார்க்க விரும்புகிறேன்’

‘முடியாது குருவே, நினைத்தவுடன் என்னால் காட்ட முடியாது’

‘சரி, எப்போது காட்ட முடியும்’

‘சொல்ல முடியாது. அது எதிர்பாராமல் நிகழ்வது’

‘அப்படியானால் உனக்குள்ள பிரச்சனை இயற்கை குணத்தால் ஏற்பட்டதல்ல. பெற்றோர் மூலமாக பிறக்கும்போது உருவானதும் அல்ல. நினைத்த மாத்திரத்தில் உன்னால் அதைக் காட்டவும் முடியவில்லை. யோசித்துப் பார்’

________________________________________________________________

குணங்கள் பற்றிய எண்ணக்கருக்கள் மூன்று வகைப்படும். அவையாவன: கற்றலால் பெற்றுக் கொண்டவை, உணர்வுகள் மூலம் பெற்றுக் கொண்டவை, எண்ணங்கள் மூலம் பெற்றுக் கொண்டவை.

முதிர்ச்சி அடைய அடைய எண்ணங்கள் மூலம் பெற்றுக் கொண்ட குணம் வலிமை பெறும். அதனால்தான் குருவின் அறிவுரை ‘யோசித்துப் பார்’ என்றிருந்தது.

ஜென் கதைகள் · philosophy

சென் கதைகள் – அழகு / இயற்கை அழகு

ஒரு ஊரில் இரு சென் வழிபாட்டிடங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று மிகப் பெரியது. அதில் நந்தவனம் ஒன்றும் இருந்தது. அவ்விரு வழிபாட்டிடங்களின் நடுவே சிறிய சுவர் மட்டுமே இருந்தது.

நந்தவனத்தை ஒருவர் பராமரித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள், ஒரு பெரிய துறவி வருகின்றார் என்பதால் நந்தவனம் முழுமையும் பார்த்துப் பார்த்துச் சுத்தம் செய்தார். செடிகளை வெட்டி அழகு படுத்தினார். காய்ந்த மற்றும் பழுத்த இலைகளையெல்லாம் அங்கிருந்து அப்புறப் படுத்தினார். நந்தவனம் பிரகாசமாய் இருந்தது.

இவர் செய்யும் பணிகள் அத்தனையையும் சுவருக்கு அப்பால் இருந்து அந்த ஆலயத்தில் இருந்த ஒரு வயது முதிர்ந்த சென் துறவி பார்த்துக் கொண்டே இருந்தார்.

அவரைக் கவனித்த நந்தவன தோட்டக்காரர், ‘ஐயா, இப்போது நந்தவனம் எத்தனை அழகாக இருக்கின்றது பார்த்தீர்களா?’ என்றார்.

துறவியோ, ‘ம்ம். . . ஒன்றே ஒன்று மட்டும் குறைபாடாக இருக்கின்றது. என்னை இந்தச் சுவரைத் தாண்டி வருவதற்குக் கை கொடுத்தால் அதைச் சரி செய்து விடுவேன். அப்புறம் மிக அருமையாக இருக்கும்.’ என்றார்.
வயது முதிர்ந்த ஜென் துறவியை சுவரேற்றிக் கீழே இறங்க உதவி செய்தார் தோட்டக்காரர்.

உள்ளே நுழைந்த துறவி ஒரு மரத்தின் அருகில் சென்று அதைப் பலம் கொண்ட மட்டும் பிடித்து ஆட்டினார். அப்போது சில இலைகள் இயற்கையாய்க் கீழே விழுந்தன.

‘அவ்வளவு தான்! இப்போது தான் அருமையாக இருக்கின்றது’ என்றார் துறவி.

—————————————————————————————

இன்றைய நாகரீகம், அலங்கோலமான தோற்றப்பாட்டை அழகு என்று காட்டி மாயைக்குள் பலரை விழ வைக்கிறது. குறிப்பாக இளம் சமூகத்தினர் அழகு என்பதை செயற்கையாக அடைய முயன்று பணத்தை வீணாக்குவது எந்த அகமகிழ்சியையும் கொடுக்காது.

அவள் அழகு என்பதற்காக ஒரு பெண்ணை நீ அன்பு செய்யவில்லை. நீ அன்பு செய்வதால் அவள் அழகாக இருக்கிறாள்.

ஜென் கதைகள்

சென் கதைகள் – மனவுறுதி

bow and arrow aim

ஓர் புகழ் பெற்ற வில்வித்தைக்கார சென் துறவி இருந்தார். அவரிடம் போட்டியிட  ஓர் திறமை வாய்ந்த இளம் வில்வித்தைக்காரர் முன்வந்தார்.

துறவிக்கு சவால்விடக் கூடியவராய் அந்த இளம் வில்வித்தை வீரர் இருந்தார். இருவரும் பல போட்டிகளிலும் வென்று முன்னேறினர்.

தூரத்தில் இருக்கும் ஒரு மாட்டு பொம்மையின் கண்ணில் மிகச் சரியாக முதல் அம்பால் அடித்து, பின் அடுத்த அம்பால் அந்த அம்பையே இரண்டாய் பிளந்து சாதனை செய்து காட்டினார் இளம் வீரர்.

‘அருமை’ என்று பாராட்டிய துறவி, ‘என்னுடன் ஒரு இடத்துக்கு வா. அங்கு வந்து ஜெயிக்க முடிகின்றதா என்று பார்ப்போம்’ என்றார்.

அடக்க முடியா ஆவலுடன் துறவியைப் பின் தொடர்ந்தார் இளம் வீரர்.

ஒரு பெரிய மலைச்சிகரத்தில் ஏறிய துறவி, மிக உயரத்தில் இரண்டு மலைகளினிடையே நடந்து செல்வதற்காக போடப்பட்டிருந்த சின்னஞ் சிறிய மரப்பாலத்தின் நடுவில் சென்று நின்றார். பாலம் ஒருவர் மட்டுமே செல்ல முடிந்ததாய் இருந்தது. கீழே பாதாளம். கொஞ்சம் சறுக்கினால் மரணம் நிச்சயம்.

தன் வில்லை எடுத்த துறவி, அம்பைத் தொடுத்து தூரத்தில் இருந்த ஒரு மரத்தின் கனியில் மிகச் சரியாக அடித்தார்.

அடித்து விட்டு, ‘இப்போது உன் முறை’ என்றபடி பாலத்தில் இருந்து மலைப்பகுதிக்குச் சென்று  நின்று கொண்டார்.

இளம் வீரருக்கோ கை, கால் எல்லாம் உதறியது. கனியியை சரியாக அம்பால் எய்ய முடியவில்லை.

அவரது முதுகைத் தடவிக் கொடுத்த துறவி, ‘உன் வில்லில் இருக்கும் உறுதி, மனதில் இல்லை.’ என்றார்.

—————————————————————————————————

மனவுறுதி இல்லாதவனின் உள்ளம் குழம்பிய கடலுக்கு நிகரானது. மனவுறுதி இல்லாவிட்டால் உலகில் எந்த செயலையும் சாதிக்க முடியாது.
~ பாரதியார் ~
ஜென் கதைகள்

சென் கதைகள் – வெறுமை

சென் துறவி ஒருவர் தனது 60வது வயதில் தான் ஜென் தத்துவங்களைப் படிக்க ஆரம்பித்தார். தனது 80வது வயது வரை படித்தார். பின்னர் தான் காலமான 120ம் வயது வரை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்.

அந்த துறவியிடம் மாணவன் ஒருவன்…

ஒரு மாணவன், ‘குருவே, என் மனதில் எதுவுமே இல்லையென்றால் என்ன செய்வது?’ என்றான்.

குரு, ‘அதைத் தூக்கி எறிந்து விடு’, என்றார்.

மீண்டும் அவன், ‘என்னிடம் தான் எதுவுமே இல்லையே? எப்படித் தூக்கி எறிவது?’ என்றான்.

குரு மீண்டும், ‘சரி, அப்படியானால் நீயே வைத்துக் கொள்’ என்றார்!

————————————————————————————————-

இல்லாத ஒன்றை இருப்பதாகவும்; இருப்பதை இல்லாததாகவும் கருதிக் கொண்டு வாழ்கிறோம். பலருக்கு கூடலை ஞானம்தான் கைகொடுக்கிறது. இன்னும் பலருக்கு அதுவும் அல்ல.

நான் இந்த உலகத்திற்கு வெறும் கையுடன் வந்தேன்; வெறும் கையுடன் இவ்வுலகை விட்டுப் போகிறேன்.
~ மகா அலெக்ஸ்சாண்டர் ~
ஜென் கதைகள்

சென் கதைகள் – மெஞ்ஞானம்

மாணவன் ஒருவன் சென் துறவியிடம் கேட்டான், ‘குருவே மெஞ்ஞானம் என்பது என்ன?’

குரு பதிலாக, ‘பசிக்கும் போது சாப்பிடுவது, களைப்பாக இருக்கும் போது தூங்குவது’ என்றார்.

———————————————————————————————————————————–

சென் கதைகள் கேட்பதற்கு பைத்தியக்காரத்தனம்போல் தெரியும். இதை கதையாகப் பார்த்தால் கதை; ஆழமாக சிந்தித்தால் மெஞ்ஞானம்.

ஞானிகளுக்கும் பைத்தியங்களுக்கும் நூலிடைதான் வித்தியாசம்.

எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு