common · motivation

உறுதியான அணுகுமுறை

தந்தை: நான் தெரிவு செய்யும் ஒரு பெண்ணை நீ கட்டாயம் திருமணம் செய்ய வேண்டும்.

மகன்: இல்லை, மணப்பெண்ணை நான்தான் தெரிவு செய்ய வேண்டும்.

தந்தை: ஆனால், நான் தெரிவு செய்த பெண் பில்கேட்சின் மகள்.

மகன்: உண்மையாகவா? அப்படியானால் எனக்குச் சம்மதம்.

 

அடுத்த நாள் அந்தத் தந்தை பில்கேட்சிடம் சென்றார்.

தந்தை: என்னிடம் உங்கள் மகளுக்கு ஏற்ற ஒரு மணமகன் உள்ளார்.

பில்கேட்ஸ்: மன்னிக்கவும், என் மகள் திருமண வயதிற்கு வரவில்லை.

தந்தை: ஆனால், நான் பார்த்த அந்த மணமகன் உலக வங்கியின் உபதலைவர்.

பில்கேட்ஸ்: அப்படியா? அப்படியானால் எனக்குச் சம்மதம்.

 

கடைசியாக, அந்தத் தந்தை உலக வங்கியின் தலைவரிடம் சென்றார்.

தந்தை: என்னிடம் உலக வங்கியின் உபதலைவராக பரிந்துரைக்கக் கூடிய ஒரு வாலிபன் உள்ளார்.

தலைவர்: ஏற்கெனவே என்னிடம் தேவைக்கு அதிகமான உபதலைவர்கள் உள்ளனர்.

தந்தை: ஆனால், இந்த வாலிபன் பில்கேட்சின் மருமகன்.

தலைவர்: ஓ! அப்படியானால் எனக்குச் சம்மதம்.

Positive Approach

படிப்பினை: 

இதுதான் வியாபார உத்தி. உங்களிடம் எதுவுமே இல்லையென்றாலும், நீங்கள் எதையும் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், உங்கள் அணுகுமுறையும் மனோபாவமும் கட்டாயம் உறுதியானதாக இருக்க வேண்டும்.

common

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே

சங்ககாலப் புலவர் நக்கீரன் என்பவர் பண்டைய பாண்டிய நாட்டிலுள்ள மதுரையில் வாழ்ந்தவர் என்றும், இவர் “இயற்கையிலேயே பெண்களின் கூந்தலில் வாசனையுண்டா” என்ற விவாதத்தின்போது சிவனையே எதிர்த்தவர் என்ற தொன்மக்கதை உள்ளது.

%e0%ae%a8%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d

நெற்றிக்கண் என்பது சிவனின் நெற்றியில் செங்குத்தாக இருக்கும் கண் என்பது இந்து சமய நம்பிக்கை. மூடப்பட்டிருக்கும் இக்கண் கடும் கோபத்தின்போது திறக்கப்படும் என்றும், அதனால் நெருப்பு வெளிப்படும் என்றும், அது அழிக்கக்கூடியது என்றும் குறிப்பிடப்படுகின்றது.

இது மூன்றாவது கண் என்றும் அழைக்கப்படும். இது ஞானக்கண் என்ற கருத்தும் உள்ளது.

குறிப்பிட்ட விவாதத்தின்போது சிவன் தன்னுடைய நெற்றிக்கண்ணை திறந்தபோது, புலவர் நக்கீரன் அதற்கு அஞ்சாது நியாயத்தை எடுத்துச் சொல்வதில் உறுதியாக இருந்தார்.

இன்றைய அறிவியல் உலகில் இச்சம்பவம் உண்மையா என்ற வினாவை எழுப்பலாம். உண்மை, உண்மையில்லை என்ற விவாதத்திற்கு அப்பால் இச்சம்பவத்தின் படிப்பினை சிறந்த கருத்தியலைத் தருகின்றது.

சுய நலம், சுய இலாபம் என்பவற்றுக்காக பலர் உண்மையை மறுதலிக்கவும், பிழையைச் சரியென்று ஏற்றுக் கொள்ளும் போக்கு உள்ளது. அநியாயம் நியாயமாக்கப்படுவதும், நியாயத்தின் மீது குற்றம் சுமத்தப்படும் போக்கும் இன்றைய நடைமுறையில் சாதாரணமாகிவிட்டது.

தொன்மக் கதையாயினும், வரலாற்றில் புலவர் நக்கீரர் நினைவு கொள்ளப்பட அவரின் அஞ்சாமைக்கு அப்பால், அவர் நியாயத்தின் பக்கம் நிலை நின்றது சிறப்பிடம் பெறுகின்றது. சோக்கிரடீசின் மரணம், சேகுவேராவின் உறுதி போன்றவை காலம் காலமாக மதிக்கப்படுவதும் நேசிக்கப்படுவதும் அவர்கள் அநியாயத்திற்குத் துணை போகமல் மரணம் வரை நியாயத்தின் பக்கம் நின்றதேயாகும்.

தமிழ்

தமிழ் ஓரெழுத்துச் சொற்கள்

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247 இல் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன. அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவையாவன பின்வருமாறு:

single-letter-words

அ = எட்டு
ஆ = பசு
ஈ = கொடு, பறக்கும் பூச்சி
உ = சிவன்
ஊ = தசை, இறைச்சி
ஏ = அம்பு
ஐ = ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ = வினா, மதகு
கா = சோலை, காத்தல்
கூ = பூமி, கூவுதல்
கை = கரம், உறுப்பு
கோ = அரசன், தலைவன், இறைவன்
சா = இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ = இகழ்ச்சி, திருமகள்
சே = எருது, அழிஞ்சில் மரம்
சோ = மதில்
தா = கொடு, கேட்பது
தீ = நெருப்பு
து = கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ = வெண்மை, தூய்மை
தே = நாயகன், தெய்வம்
தை = மாதம்
நா = நாக்கு
நீ = நின்னை
நே = அன்பு, நேயம்
நை = வருந்து, நைதல்
நொ = நொண்டி, துன்பம்
நோ = நோவு, வருத்தம்
நௌ = மரக்கலம்
பா = பாட்டு, நிழல், அழகு
பூ = மலர்
பே = மேகம், நுரை, அழகு
பை = பாம்புப் படம், பசுமை, உறை
போ = செல்
மா = மாமரம், பெரிய, விலங்கு
மீ = ஆகாயம், மேலே, உயரம்
மு = மூப்பு
மூ = மூன்று
மே = மேன்மை, மேல்
மை = அஞ்சனம், கண்மை, இருள்
மோ = முகர்தல், மோதல்
யா = அகலம், மரம்
வா = அழைத்தல்
வீ = பறவை, பூ, அழகு
வை = வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ = கௌவுதல், கொள்ளை அடித்த

common · motivation

ஒட்டகத்தின் கதை

குட்டி ஒட்டகத்திற்கும் தாய் ஒட்டகத்திற்கும் இடையில் நடந்த உரையாடல் கற்பனையாக இங்கு தரப்படுகிறது. இந்த ஒட்டகத்தின் கதை சூழ்நிலையால் நீங்கள் கட்டப்பட்டவரா, நீங்கள் இருக்க வேண்டிய இடம் எது போன்ற கேள்விகளால் விழிப்புணர்வைத் தருகிறது.

story-of-camel

“அம்மா, நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?”
“நிச்சயமாக, கேள் மகனே.”

“ஏன் எங்களுக்கு இந்த கூன் முதுகு பெரிதாக வளைந்து இருக்கிறது.”
“நாம் பாலைவன மிருகங்கள். ஆகையால், இது எங்களுக்கு நீரைச் சேகரித்து வைப்பதற்கு உதவுகிறது. நீர் இல்லாவிட்டால் நாம் உயிர்வாழ முடியாது.”

“சரி, அப்படியென்றால் ஏன் எமது கால்கள் நீளமாகவும், பாதங்கள் வட்டமாகவும் இருக்கின்றன?”
“உண்மையிலேயே எனைய விலங்குகளைவிட நாம் பாலைவனத்தில் அதிகம் நடப்பதற்கும், ஆபத்து ஏற்படாமல் இருப்பதற்குமே அவ்வாறு இருக்கின்றன.”

“ஏன் எங்களுக்கு நீளமான இமைகள் இருக்கின்றன? சிலவேளை அவற்றைப் பார்ப்பதற்கு எனக்குச் சங்கடமாக இருக்கிறன.”
“அந்த கடினமான, நீளமான இமைகள் உனது கண்களை பாலைவனக் காற்று மற்றும் தூசுகளில் இருந்து பாதுகாப்பதற்குப் பிரயோசனமானது.”

“ஓ, அப்படியா! அப்படியென்றால் கூன் முதுகு பாலைவனத்தில் இருக்கும்போது தண்ணீர் சேமிக்கவும், கால்கள் பாலைவனத்தில் பாதுகாப்பாக நடக்கவும், அத்துடன் நீண்ட இமைகள் பாலைவன மணல் காற்றிலிருந்து பாதுகாக்கவுமே பயன்படுகிறது, அப்படித்தானே?”
“ஆம், மகனே.”

“இன்னும் ஒரேயொரு கேள்வி அம்மா…”
“கேள், மகனே.”

“அப்படியென்றால், எந்த மடையன் எங்களைக் கொண்டு இந்த மிருகக் காட்சிச்சாலைக்குள் அடைத்து வைத்தது?”

அறிவு, திறன், மனப்பாங்கு, அனுபவங்கள் எல்லாமே பொருத்தமான இடத்தில், சந்தர்ப்பத்தில்தான் உபயோகமானது. அவ்வாறெனில், நீங்கள் எந்த இடத்தில் இருக்கின்றீர்கள்? பொருத்தமான இடத்தில் இருக்கிறீர்களா? அல்லது அறிவு, திறன், மனப்பாங்கு, அனுபவங்கள் போன்றவற்றை பயன்படுத்த முடியாத, சூழ்நிலையால் அடைக்கப்பட்ட இடத்தில் இருக்கிறீர்களா?

common

இலகுவானதும் கடினமானதும்

easy-and-difficult

ஒருவருடைய நாட்குறிப்பில் இடம் பிடிப்பது இலகு.
ஒருவருடைய இதயத்தில் இடம் பிடிப்பது கடினம்.

மற்றவருடைய பிழைகளை குறை சொல்வது இலகு.
தன்னுடைய பிழைகளை கண்டு கொள்வது கடினம்.

யோசனையின்றிப் பேசுவது இலகு.
நாவை அடக்குவது கடினம்.

உன்னை அன்பு செய்பவரை நோகச் செய்வது இலகு.
காயப்பட்ட இதயற்றை ஆற்றுவது கடினம்.

மற்றவரை மன்னிப்பது இலகு.
மன்னிப்புக் கேட்பது கடினம்.

சட்டங்களை இயற்றுவது இலகு.
அதனை கடைப்பிடிப்பது கடினம்.

ஒவ்வொரு இரவும் கனவு காண்பது இலகு.
கனவுக்காக செயற்படுவது கடினம்.

வெற்றியைக் காட்டுவது இலகு.
தோல்வியை கருத்தில் எடுப்பது கடினம்.

வாக்கு அளிப்பது இலகு.
அதனை நிறைவேற்றுவது கடினம்.

அன்பு செய்கிறேன் என்று சொல்வது இலகு.
அதனைச் செய்து காட்டுவது கடினம்.

மற்றவரை விமர்சிப்பது இலகு.
தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்வது கடினம்.

பிழை விடுவது இலகு.
அதிலிருந்து கற்றக் கொள்வது கடினம்.

இழப்புக்கான அழுவது இலகு.
இழக்காமல் பார்த்துக் கொள்வது கடினம்.

பெறுவது இலகு.
கொடுப்பது கடினம்.

இதை வாசிப்பது இலகு.
அதனைப் பின்பற்றுவது கடினம்.

motivation · Self-help

ஆற்றலின் 48 விதிகள்

ஆற்றலின் 48 விதிகள் (The 48 Laws of Power) என்ற நூல் ரொபட் கிறீன் என்பவரால் எழுதப்பட்டு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனை செய்யப்பட்டன.  அந்த நூல் குறிப்பிடும் முக்கியமான கூற்றுக்கள் சிலவற்றின் தமிழாக்கம் இங்கே:

The 48 Laws of Power Tamil

தன்னுடைய சொற்களைக் கட்டப்படுத்தாதவன் தன்னையும் கட்டுப்படுத்த மாட்டான். அவன் மதிப்புக்கும் தகுதியற்றவன்.

உன்னுடைய தனித்திறமையையும் உன்னையும் உலகிற்கு நீ வெளிப்படுத்தும்போது, சீற்றம், பொறாமை, பிற பாதுகாப்பற்ற வெளிப்படுத்தல்கள் போன்றவற்றை இயற்கையாகவே நீ தூண்டிவிடுவாய். மற்றவரின் இவ்வாறான சிறுமைத்தனமான உணர்வுகள் பற்றி கவலைப்படுவதில் நீ உன் வாழ்க்கையை செலவிடத் தேவையில்லை.

செயற்பாட்டின் வழி நிச்சயமில்லாவிட்டால், அதனைச் செய்ய வேண்டாம். உன்னுடைய சந்தேகமும் தயக்கமும் செயற்படுத்தலில் தொற்றிவிடும். துணிவின்மை ஆபத்தானது. ஆகவே, துணிச்சலாகச் செல்வதே சிறப்பானது. துணிவுக்கூடாக நிகழ்ந்த எந்தத் தவறையும் இன்னும் அதிக துணிவுடன் இலகுவாக திருத்திக் கொள்ள முடியும். ஒவ்வொருவரும் துணிவைப் பாராட்டுகிறார்கள். யாரும் துணிவின்மையைப் புகழ்வதில்லை.

நட்பும் காதலும் ஒவ்வொரு மனிதனையும் அவனுடைய விருப்பங்களுக்கு குருடாக்கிவிடுகிறது.

மாற்றத்திற்காகவோ அல்லது வதந்திகளுக்காகவோ உன்னுடைய தனிச்சிறப்பை விட்டுவிட வேண்டாம். இது உன்னுடைய வாழ்க்கையின் கலைப்படைப்பு. இதனை நீதான் செதுக்க வேண்டும், சாணை தீட்ட வேண்டும். ஒரு கலைஞனுக்குரிய கவனத்துடன் வெளிக்காட்ட வேண்டும்.

பல முக்கியமான சிந்தனையாளர்கள் சிறைச்சாலைகளில்தான் உருவாக்கப்படுகிறார்கள். அங்குதான் ஒன்றும் செய்யாமல் சிந்தனை மட்டும் செய்ய முடியும்.

நண்பர்களிடத்தில் விழிப்பாயிரு. அவர்கள் பொறாமையால் இலகுவாக தூண்டப்படுவதால், மிகவும் விரைவாக உன்னை மறுதலித்துவிடுவார்கள். அவர்கள் கெட்டு, முறைகேடானவர்களாக மாறிவிடுவார்கள். ஆனால் உன் முந்தைய எதிரியை வாடகைக்கு அமர்த்து. அவன் தன்னை நிரூபிப்பதற்கு அதிகம் இருப்பதால், நண்பனைவிட மிகவும் உண்மையாக இருப்பான். ஆகவே, எதிரியைவிட நண்பனிடத்தில் அதிகம் பயப்பட வேண்டும். உனக்கு எதிரியே இல்லாவிட்டால், அவர்களை உருவாக்கும் வழியைத் தேடு.

மேய்பனைத் தாக்கு, மந்தைகள் சிதறிவிடும்.

ஆற்றலுக்கான திறவுகோல் என்பது உன்னுடைய எல்லா விரும்பங்களுக்கும் ஏற்ற சிறந்தவர்களை கண்டு கொள்வதாகும். நண்பர்களை நட்புக்காக வைத்துக்கொள். ஆனால், திறமையுடனும் தகுதியுடனும் வேலை செய்.

கடவுளே, நண்பர்களிடமிருந்து என்னைக் காத்தருளும். எதிரிகளை நான் பார்த்துக் கொள்வேன்.

மனித நாவு மிருகம் போன்றது. சிலர்தான் அதனை வெற்றி கொள்கிறார்கள். அது தன்னுடைய கூட்டை உடைத்து வெளியேற தொடர்ந்து முயற்சிக்கிறது. அது அடைக்கப்படாவிட்டால், கொடியதாக மாறி உன்னை தேவனையில் ஆழ்த்திவிடும்.

இறக்கும் தருவாயில் இருந்த ஒரு அரசியல் வல்லுனரிடம் இளவரசர் கேட்டார் “உன்னுடைய எல்லா எதிரிகளையும் அரசன் மன்னிக்கிறாரா?”. பதிலாக, “என்னுடைய எதிரிகள் எல்லோரையும் நான் மன்னிக்கவில்லை. அவர்கள் எல்லோரையும் நான் சுட்டுவிட்டேன்.”

உன்னுடைய சொந்தப் பாணியில் அரசன் போலவே இரு. அரசன் நடத்தப்படுவது போலவே நடந்து கொள்.

நினைவிற்கொள்: சிறந்த வஞ்சகமானவர்கள் அவர்களின் போக்கிரித்தனமான பண்புகளை மறைக்க அவர்களால் செய்யக்கூடிய எதையும் செய்வார்கள். மற்றவர்களிடம் அவர்களின் வஞ்சகத்தனத்தை மாறுவேடமாக்க நேர்மையின் ஆகாயத்தை ஒரு இடத்தில் பயிரிடுவார்கள். அவர்களிடம் உள்ள ஆயுதங்களில் நேர்மை என்பது சாதாரண பொறியாகும்.

மற்றவரைவிட சிறப்பாக காட்டிக் கொள்வது எப்போதும் ஆபத்தானது. இதைவிட பெரிய ஆபத்து என்னவென்றால் பிழையோ அல்லது குறைவோ இல்லாது காட்டிக் கொள்வதுதான். பொறாமை இரகசிய எதிரிகளை உருவாக்கும்.

சமூகம் உன்னில் சுமத்தும் பாத்திரத்தை ஏற்காதே. உன்னை மீளவும் உருவாக்க புதிய அடையாளத்தை வார்ப்பிடு. மாற்றவர்கள் உன்னில் உருவாக்குவதற்குப் பதில் உன்னுடைய உருவத்திற்கு நீயே பொறுப்பாகவிரு.

ஒருபோதும் பெறுமதியான நேரத்தை அல்லது மனதின் சமாதானத்தை மற்றவர்கள் நிமித்தம் வீணடிக்க வேண்டாம். இது மிகவும் அதிகமான விலை.

ஆற்றலின் விளையாட்டை வெற்றி கொள்ள, உன்னுடைய உணர்வுகளை நீ ஆள வேண்டும். சுய கட்டுப்பாட்டை வெற்றி கொள்ள முடிந்தாலும், உன்னைச் சுற்றியுள்ள உணர்ச்சிமயமான அமைப்புக்களை உன்னால் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. அதுவே பெரும் ஆபத்தை வழங்குகிறது.

கவிதை

ஏழையின் ஹைக்கூ

poor

தூக்கம்

ஏழைக்குக் கிடைக்கும்

கொஞ்ச நேர

சொர்க்கம்


கனவு

ஐந்து நட்சத்திர ஹோட்டல்

செல்ல ஏழைக்குக் கிடைத்த

இலவச பற்றுச்சீட்டு


பசி

உடலுக்கும் உயிருக்கும்

உள்ள தொடர்பு மாதிரி

வயிற்றுடன் உள்ள தொடர்பு


ஏழை

பணமில்லா

இராச்சியத்தின்

குடிமகன்


பிச்சை

எல்லா வழிகளும் அடைக்கப்பட

வாயும் வயிறும்

திறந்த வழி


பணம்

உடலுக்கு உயிர் போல இருப்பதால்

ஏழையின் உயிரை ஊசலாட வைக்கும்

காலன்